தாவர உண்ணி


Contributors to Wikimedia projects

Article Images

தாவர உண்ணி

தாவர உண்ணி அல்லது இலையுண்ணி (Herbivore) என்பது மரம், செடி, கொடி, புல் பூண்டு முதலியவற்றை உண்டு உயிர்வாழும் விலங்கு வகையைக் குறிக்கும். அதாவது இவ்விலங்குகள் ஊன் (இறைச்சி, புலால்) உண்ணுவதில்லை. ஆடு, மாடு, எருமை, மான், யானை, குதிரை முதலிய விலங்குகள் தாவர அல்லது இலை உண்ணிகளாகும். இவை பொதுவாக முதலான நுகரிகளாக (primary consumers) இருக்கும்.

மான் போன்ற விலங்குகள் தாவர உண்ணி (இலையுண்ணி)களாகும். இவை இலை, தழை போன்று தாவர (நிலைத்திணை) வகை உணவுகளையே உண்டு உயிர்வாழ்கின்றன.

விலங்குகள் தமது உணவை உட்கொள்ளும் முறையைக் கொண்டு மூன்று பிரிவாக வகைப்படுத்தப்படும். அவையாவன தாவர உண்ணி, ஊனுண்ணி, அனைத்துண்ணி ஆகும். தாவர உண்ணிகளுக்கு நேர் மாறாக சிங்கம் (அரிமா), புலி முதலிய விலங்குகள் இறைச்சி உண்ணும் ஊன் உண்ணி வகையைச் சார்ந்த விலங்குகளாகும்.

பொதுவாக விலங்குகள் தாவரங்களை உண்ணும்போதே அவை தாவர உண்ணி என்ற பெயரைப் பெறுகின்றன. உயிருள்ள தாவரங்களில் தமக்குத் தேவையான ஆற்றலைப் பெறும் பாக்டீரியா, அதிநுண்ணுயிரி போன்ற ஏனைய உயிரினங்கள் தாவர நோய்க்காரணிகள் எனப்படும். இறந்த தாவரங்களில் தமக்கான ஆற்றலைப் பெறும் பூஞ்சைகள் சாறுண்ணிகள் (Saprophytes) எனப்படும். ஒரு தாவரமானது, தனது உணவை வேறு தாவரத்தில் இருந்து பெறுமாயின் அது ஒட்டுண்ணித் தாவரம் எனப்படும்.